No results found

    மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்


    இருவர், இறைவனிடம் வேண்டுவதற்காக ஆலயத்துக்கு சென்றனர். அதில் ஒருவர் பரியேசர். மற்றொரு நபர், வரிதண்டுபவர். பரியேசரின் ஜெபமானது, கடவுளே நான் கொள்ளையர், நேர்மையற்றோர் போன்றோ அல்லது மற்ற மக்களைப்போலவோ, இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாது இருக்கிறேன். அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இதுதவிர வாரத்தில் நான் இரு முறை நோன்பிருக்கிறேன். என் வருவாயில் பத்தில் ஒரு பங்கை பிறருக்கு கொடுக்கிறேன் என்கிற பாணியில் அவரது வேண்டுதல் இருந்தது. ஆனால் வரிதண்டுபவரின் ஜெபம் வேறு விதமானது. அது, வானத்தை அண்ணாந்து பார்க்க கூட துணிவில்லாமல், தம் மார்பில் அடித்துக்கொண்டு, கடவுளே, பாவியாகிய என் மீது இரங்கியருளும் என்றிருந்தது. இந்த இரண்டு பேரின் ஜெபங்களில், பரியேசரின் ஜெபத்தை விட, வரிதண்டுபவரின் ஜெபமே கடவுளுக்கு ஏற்புடையதாக இருந்தது.

    இயேசுவுக்கு பிடிக்காதவர்கள் யார்? என்றால், அது பரியேசர்கள் போன்றவர்கள் தான். ஏனெனில் பரியேசரின் மனநிலை என்பது தன்னை ஜெபத்தில் கூட விளம்பரப்படுத்தி கொள்வது போன்று இருந்தது. அது, சொல் ஒன்றாகவும், செயல் மற்றொன்றாகவும் இருக்கும் மனநிலை. அத்தகையவர்கள், பிறர் நம்மை பார்க்க, போற்ற, புகழ வேண்டும் என்ற சுயநலத்துடன் ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். தான் இழிவானதொரு வாழ்க்கை வாழ்ந்தாலும் பிறருக்கு முன்னே தன்னை யோக்கியர் என்று காட்டிக்கொள்வர். ஆண்டவர் இயேசு, உங்கள் செயல்பாடுகளே சிறந்த சான்றுகள் என கூறியுள்ளார்.

    ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்வினை பார்க்காதே என்று நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். தனிமனித ஒழுக்கம் இல்லையென்றால் இந்த சமுதாயத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. தனி மனித மனமாற்றம் தான் சமுதாய மாற்றத்துக்கு ஆணி வேராகும். அது தன்னிலை உணர்தலில் தான் ஆரம்பம் ஆகிறது. எனவே, மனம் மாறுங்கள், நற்செய்தியை நம்புங்கள், இறையாட்சி வந்து விட்டது என்ற இயேசுவின் போதனையை ஏற்று, சொல்லால் அல்ல, செயலால் வாழ்ந்து காட்டுங்கள். 

    அருட்பணி. ஜான்பீட்டர், இயக்குனர், 

    புனித தோமா அருட்பணி மையம், திண்டுக்கல். 

    Previous Next

    نموذج الاتصال