No results found

    காத்திருத்தலால் கிடைக்கும் நன்மைகள்


    தற்போதய உலகம் மிகமிக அவசரமானதாக மாற்றப்பட்டுவிட்டது. காலையில் விதைத்ததை மாலையில் நல்ல லாபத்தோடு அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கும் மக்களை அதிகம் கொண்ட உலகம் இது. ‘காத்திருத்தல்’ என்ற ஒரு அம்சத்தை வெறுக்கும் கோட்பாடு, இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்றிக்கொண்டுள்ளது. எந்தத் தொழிலில் இறங்கினாலும் லாபத்தை மட்டுமே நோக்கமாக வைத்து செயல்படுவதால், மனசாட்சிக்கு உட்பட்ட தர்மத்தை பெரும்பாலானோர் மறந்தே போய்விட்டனர். இதனால் குற்றங்களும், பாவங்களும் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே இருக்கின்றன. லாபம் அதிகமாக கிடைக்கிறது என்றால், நம்பிக்கைத் துரோகம் உடனே, எளிதில் நடந்தேறிவிடுகிறது.

    இப்படி லாபத்தை நோக்கி அவசரமாக சென்றுகொண்டிருக்கும் உலகத்தில், கிறிஸ்தவ ஆன்மிகத்தின் ஒரு முக்கிய அம்சமான காத்திருத்தல் என்பதை கடைப்பிடிப்பது மிகவும் பாரமானதாக உணரப்படுகிறது. ஏதாவது நன்மையை பெறுவதற்காக உலக வழிகளில் செல்லாமல், வேத வழிகாட்டுதல்படி காத்திருப்பதால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்களிடம் உண்டு. ஆனால், உலகத்தின் அவசரத்துக்கு ஏற்ப வேதத்தின் கட்டளைகளை மாற்றிக்கொள்ள முடியாது. இறைவனிடம் இருந்து கிடைக்க வேண்டிய நன்மைகளை, நம்பிக்கையோடும் பொறுமையோடும் காத்திருந்து பெற வேண்டுமென்பதே வேத கட்டளையாக உள்ளது. (லூக்கா 12:36, ரோமர் 8:23,25, எபி. 6:15, யூதா 1:21).

    காத்திருத்தல் என்றால் என்ன? பாவமன்னிப்பைப் பெற்று (இறைவனிடமும், நமது பாவத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடமும்) உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகுதான், இறைவன் செயல்பாட்டுக்காக காத்திருத்தல் என்பதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும். இயல்பான வாழ்க்கை வாழும்போது, நம்மை திட்டுபவர்களை பதிலுக்கு உடனே திட்டியிருப்போம். அடித்தவர்களை பதிலுக்கு அடித்திருப்போம். குற்றம்சாட்டுபவர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்போம். சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும்போது பாவத்தை நோக்கி சாய்ந்திருப்போம். ஆனால், உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு, பதிலுக்கு திட்டுவது, அடிப்பது, குற்றம்சாட்டுவது என்பதுபோன்ற உலக இயல்பு நடவடிக்கைகளில் இறங்க முடியாது.

    இதுபோன்ற அவமானகரமான நேரங்களில் பதில் செய்யாமல் அவமதித்தவர்களை இறைக்கட்டளைப்படி மன்னித்துவிடுகிறோம். ஆனால், இதுபோன்ற இறைவழியில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதும், அது எப்போது கிடைக்கும் என்பதும் புரியாத புதிராகவே காணப்படும். ஆனால் அந்த நன்மைகள் கிடைக்கும்வரை இயேசு காட்டியுள்ள வழியைவிட்டு விலகாமல் பொறுமையுடன் சகித்து வாழ்வதன் பெயர்தான் காத்திருத்தல் ஆகும். நன்மைகள் வந்து கிடைத்த பிறகுதான் காத்திருத்தலின் அருமை தெரியவரும். ஆனால் பலரும் காத்திருத்தலை தவிர்த்து உலக வழிகளில் சென்றுவிடுகின்றனர்.

    அபகரித்தவர் மற்றும் இழப்பை ஏற்படுத்தியவரிடம் இருந்து அதை மீட்பதற்காக குற்றச்சாட்டு, புகார், வழக்கு என்ற கிறிஸ்தவத்துக்கு எதிரான வழியில் சென்றுவிடுகின்றனர். திருமண முறிவின்போது, இறைநீதிக்கு உட்படாத மறு மணத்தை நாடுகின்றனர். இழப்பு ஏற்படுவதில் 2 நிலைகள் உள்ளன. இறைப்பாதையில் வருவதற்கு முன்பு பெற்றிருக்கும் அநியாய சம்பாத்தியங்களை, இறைவழிக்கு வந்த பிறகு இழப்பது அல்லது திருப்பிச் செலுத்துவது ஒரு நிலை (சகேயு). விசுவாச சோதனையின்போது எதிர்பாராமல் சொந்த சம்பாத்தியத்தை இழப்பது மற்றொரு நிலை (யோபு). அநியாய சம்பாத்தியத்தை இழப்பது, பெரிய அளவில் துன்பத்தை ஏற்படுத்தாது. ஆனால் யோபு போல நியாயமான சம்பாத்தியம்-உரிமையை மற்றவர் பறித்துக்கொள்வதால் இழந்து நிற்பது, மிகக் கடினமானது. இந்த கட்டத்தில்தான் விசுவாசத்துடன் காத்திருத்தல் என்ற பாதையை பக்தன் வந்தடைகிறான் (கலா.5:5). இதில் தான் அவனது விசுவாசம் சோதிக்கப்படுகிறது. இழந்து நிற்கும் நியாயமான சொத்து-உரிமையை மீண்டும் இறைவன் மீட்டுத் தருவார் என்ற எண்ணத்தில், அவரது செயல்பாட்டுக்காக விசுவாசத்துடன் காத்திருக்க வேண்டும். ஒருவேளை அது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் உலக வழிகளை நாடாமல், விசுவாச நடத்தையை காத்துக்கொள்ள வேண்டும். அப்படி காத்துக்கொண்டான் என்றால், அவன் அந்த சோதனையில் ஜெயித்துவிட்டான் என்று அர்த்தம். ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருப்பதற்கு விசுவாசம் அவசியமில்லை. அங்கு ரெயில் வந்து சேர்ந்துவிடும். ஆனால் தண்டவாளம் இல்லாத இடத்தில், சாலை இல்லாத பகுதியில் ரெயிலுக்கோ, வாகனத்துக்கோ காத்திருப்பதுதான், விசுவாசத்துடனான காத்திருப்பாகும் (ரோமர் 8:25). எனவே, இழப்பு எந்தவிதத்தில் வந்தாலும், இழப்பை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக உலக ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்தால், இறைவன் மீது வைத்துள்ள விசுவாசம் காத்துக்கொள்ளப்படும். (1 கொரி.6:7). விசுவாசம்தான் இறுதிவரை காத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும் (2 தீமோ 4:7).

    Previous Next

    نموذج الاتصال